முத்துமாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர்-பக்தர்கள் கோரிக்கை
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இளையான்குடி
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முத்துமாரியம்மன் கோவில்
இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்டது. இந்த கோவில் தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 29-ந் தேதி இரவு கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், முத்துமாரியம்மன் சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்தார். தொடர்ந்து பொங்கல் வைபவம், மின் அலங்கார தேரோட்டம் நடந்தது.
மின்னொளி அலங்கார தேர் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட தேர் சிறு சிறு மாற்றங்களுடன் தொடர்ந்து தேரோட்டத்தில் முக்கிய அங்கம் வகித்தது. இந்த ஆண்டு தேரோட்டத்திற்கான ஆயத்த பணிகளுடன் தொடங்கி அனுமதி வழங்கும் முன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தேர் மிகவும் சேதம் அடைந்துள்ளது, எனவே இந்த வருடத்துடன் தேர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்றும், புதிய தேர் செய்வதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆய்வு செய்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
பக்தர்கள் கோரிக்கை
இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்திற்கு புதிய தேர் செய்வதற்கான அனுமதி விண்ணப்பமும் அனுப்பி வைத்துள்ளது. மேலும் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளது. தாயமங்கலம் மற்றும் சுற்றுவட்டார 22 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் திருவிழாவுக்கு வந்திருந்த சமயத்தில் தேரின் சேதத்தை பார்த்த பக்தர்கள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமாரிடமும் புதிய தேர் செய்வதற்கான அனுமதி கேட்டு நாட்டார்கள் சார்பாக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு புதிய தேரில் அம்மன் பவனி வர கோவில் நிர்வாகமும், தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து புதிய தேர் செய்வதற்கான அனுமதியும், அதற்கான உத்தரவை விரைவில் வழங்க வேண்டுமென பக்தர்கள், மண்டகப்படி தாரர்கள், 5 வகையரா நாட்டார்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பக்தர்களின் நலன் கருதி கோவிலின் உள் பிரகாரத்தில் புதிய மண்டபம் கட்டும் பணியினையும் தொடங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.