கூடலூர் மங்குழியில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட புதிய சிமெண்டு பாலம்-சாலை வசதி இல்லாததால் பயன்படுத்துவதில் சிக்கல்
கூடலூர் மங்குழியில் ரூ.1 கோடியே 13 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் பாலம் கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. ஆனால் பாலத்தின் இருபுறமும் சாலை அமைக்காததால் பொதுமக்கள் பயன்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
கூடலூர்
கூடலூர் மங்குழியில் ரூ.1 கோடியே 13 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் பாலம் கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. ஆனால் பாலத்தின் இருபுறமும் சாலை அமைக்காததால் பொதுமக்கள் பயன்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
உடைந்து விழுந்த பாலம்
கூடலூர் மங்குழி ஆற்றின் மீது பழமையான பாலம் இருந்த நிலையில் கடந்தாண்டு பெய்த கன மழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பாலம் கண்ணிமைக்கும் நேரத்தில் உடைந்து விழுந்தது. இதனால் மங்குழி சுற்றுவட்டார பகுதி மக்கள் கூடலூர் நகருக்கு செல்வதற்கு முடியாமல் தவித்தனர்.
இதனால் கூடலூருக்கு செல்ல சில கிலோமீட்டர் தூரம் கூடுதலாக பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆற்றைக் கடந்து செல்வதற்காக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. அதில் பொதுமக்கள் மாணவர்கள் நடந்து சென்று வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு நகராட்சி நிர்வாகம் ரூ.1 கோடியே 13 லட்சம் நிதி ஒதுக்கியது. பின்னர் புதிய பாலம் கட்டும் பணியும் தொடங்கி வேகமாக நடைபெற்றது.
சாலை அமைக்க நிதி ஒதுக்க எதிர்பார்ப்பு
தற்போது பாலம் கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. ஆனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் பாலத்தின் இருபுறமும் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதற்கு நிதி ஒதுக்காததால் சாலை அமைக்கும் பணி தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது. இதனிடையே அப்பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலமும் சேதம் அடையும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் புதிய பாலத்தின் வழியாக நடந்து செல்கின்றனர்.
ஆனால் வாகனங்களை இயக்க முடியாத வகையில் பாலம் ஒரு மீட்டர் உயரமாக உள்ளது. இது தவிர பாலத்தின் இருபுறமும் சாலை அமைக்காததால் சேரும் சகதியுகமாக உள்ளது. இதனால் பாலத்தை இணைக்கக்கூடிய சாலையை அமைக்க விரைவாக நிதி ஒதுக்கி பணிகளைத் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.