மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி

மயிலாடுதுறையில் 14 ஏக்கர் பரப்பளவில் ரூ.24 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-07 19:00 GMT

மயிலாடுதுறையில் 14 ஏக்கர் பரப்பளவில் ரூ.24 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.

புதிய பஸ் நிலையம்

மயிலாடுதுறை நகரில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து பஸ் நிலையம் கட்டுவதற்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 14 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது தனியார் பங்களிப்புடன் புதிய பஸ்நிலையம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

ஆனால் தனியார் யாரும் டெண்டர் எடுக்க முன் வராததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையில் மயிலாடுதுறை நகரில் அரசு நிதி உதவியுடன் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறை புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.24 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

கட்டுமான பணிகள் தொடக்கம்

இதனைத் தொடர்ந்து புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நேற்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி வரவேற்றார். இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டு செங்கல்லை எடுத்து கொடுத்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்க பிரமுகர்கள், நகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர சபை துணைத் தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்