ரூ.10¼ கோடியில் புதிய பஸ் நிலையம்

ராணிப்பேட்டையில் ரூ.10¼ கோடி மதிப்பீட்டில் புதிய பஸ்நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜையை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-07 18:44 GMT

ராணிப்பேட்டையில் ரூ.10¼ கோடி மதிப்பீட்டில் புதிய பஸ்நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜையை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

ரூ.10¼ கோடியில் புதிய பஸ்நிலையம்

ராணிப்பேட்டை நகராட்சியில், நகராட்சி உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் திட்டத்தின் கீழ் ரூ10¼ கோடி மதிப்பீட்டில் புதிய பஸ்நிலையம் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இதன் அடிப்படையில் ராணிப்பேட்டை-வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் (எம்.பி.டி.ரோடு), டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் 3.95 ஏக்கரில் 13,364 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த புதிய பஸ் நிலைய கட்டுமான பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து பஸ்களும் நகரத்திற்குள் வந்து செல்லும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.

அடிப்படை வசதிகள்

பஸ் நிலையத்தில் இரண்டு புறமும் 30 வணிக கடைகள், பொதுமக்களுக்கு குடிநீர் வசதிகள், மழைநீர் வடிகால் வசதி, 24 கழிப்பறை, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், ஒரே நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் முன்பதிவு அறை, காவலர் பாதுகாப்பு அறை, நேரக் காப்பாளர் அறை, உணவகம், ஏ.டி.எம்., உடை மாற்றும் அறை, மற்றும் தாய்மார்கள் பாலூட்டும் அறை ஆகியவவைகள் அமைக்கப்பட உள்ளது. இப்பணியின் ஒப்பந்த காலம் ஒரு வருடம் ஆகும்.

பணிகளை தரமாகவும், குறித்த காலத்திற்குள் முடிக்கவும் ஒப்பந்ததாரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், ஜி.கே. உலகப் பள்ளி மேலாண்மை இயக்குனர் வினோத்காந்தி, நகரமன்ற துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி பொறியாளர் ருத்ரகோட்டி, ஒப்பந்ததாரர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்