வள்ளியூரில் ரூ.12.13 கோடியில் புதிய பஸ்நிலையம்-சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்
வள்ளியூரில் ரூ.12.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய பஸ்நிலையத்திற்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.
வள்ளியூர்:
வள்ளியூரில் ரூ.12.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய பஸ்நிலையத்திற்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டு விழா
நெல்லை மாவட்டத்தில் வளர்ந்து வரும் ஊர்களில் வள்ளியூர் நகர பஞ்சாயத்தும் ஒன்றாகும். இதனை கருத்தில் கொண்டு வள்ளியூர் பஸ்நிலையத்தை நவீனமயமாக்க புதிய கட்டிடம் கட்டுவதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று வள்ளியூர் பஸ்நிலையம் கீழ்ப்பகுதியில் நடந்தது.
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், நகர பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
சபாநாயகர் அப்பாவு
புதிய கட்டித்திற்கான பூமி பூஜையை சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
வணிக வளாகம், கட்டண கழிப்பறை, இலவச கழிப்பறை, தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு அறை போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. புதிதாக 72 கடைகள் கட்டப்படும். அதில் தற்போது பஸ்நிலையத்தில் கடை வைத்திருக்கும் 47 வியாபாரிகளுக்கு குடவோலை முறையில் மீண்டும் ஒதுக்கீடு செய்யப்படும். திருக்குறுங்குடி, ஏர்வாடி, வள்ளியூர், பணகுடி ஆகிய நகர பஞ்சாயத்து மக்கள் பயன்பெறும் வகையில் 271 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
அப்போது வீட்டு குடிநீர் இணைப்பு கேட்டு காத்திருப்போருக்கு உடனடியாக இணைப்பு வழங்கப்படும். வள்ளியூரில் விரைவில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும். வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் கேசவனேரி சந்திப்பில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வள்ளியூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணைத்தலைவர் கண்ணன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், சுகாதார மேற்பார்வையாளர் டேனியல், நகர இளைஞரணி அமைப்பாளர் தில்லை ராஜா, தி.மு.க. பிரமுகர் நம்பி மற்றும் நகரப்பஞ்சாயத்து கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வள்ளியூர் நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் சுஷ்மா நன்றி கூறினார்.