பென்னாகரத்தில் ஆமை வேகத்தில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி-பயணிகள் சிரமத்தை தடுக்க விரைவுப்படுத்தப்படுமா?

Update: 2022-10-10 18:45 GMT

பென்னாகரம்:

பென்னாகரத்தில் ஆமை வேகத்தில் நடந்து வரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை விரைவுபடுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பென்னாகரம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக பென்னாகரம் உள்ளது. பென்னாகரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். 50-க்கும் மேற்பட்ட கிராமங்களின் மையப்பகுதியாக அமைந்துள்ள பென்னாகரத்திற்கு கல்வி, வணிகம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். பென்னாகரத்தில் மாவட்ட அரசு மருத்துவமனை, முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு பஸ்களில் வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பென்னாகரம் வழியாகவே வந்து செல்ல வேண்டும்.

அடிப்படை வசதி

தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, பாப்பாரப்பட்டி, காவேரிப்பட்டணம், பாலக்கோடு, பெரும்பாலை, மேச்சேரி, நெருப்பூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பென்னாகரம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் பென்னாகரம் பஸ் நிலையத்திற்கு காலை முதல் இரவு வரை அதிக அளவில் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

அங்கு பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாமல் இருந்தது.

ரூ.4½ கோடியில் புதிய பஸ் நிலையம்

இந்தநிலையில் பஸ்கள் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு பென்னாகரம் பஸ் நிலையத்தை பொது மக்களுக்கு தேவையான கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த பஸ் நிலையத்தில் இருந்த கட்டிடங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் பழுதடைந்து காணப்பட்டன. இதன் காரணமாக அதே பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பென்னாகரம் பஸ் நிலையம் இடிக்கப்பட்டது. அதே இடத்தில் ரூ.4 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

வாகன ஓட்டிகள் அவதி

பஸ் நிலையம் இடிக்கப்பட்டதால் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சாலையோர பகுதி தற்காலிகமாக பஸ்களை நிறுத்தும் இடமாக செயல்படுகிறது. அங்கு பஸ்கள் சாலையோரமாக பயணிகளை ஏற்றி இறக்கி சென்று வருகின்றன. இதனால் சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் முறையாக ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

கேலி, கிண்டல்

இந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகளை வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்யும் சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுக்க போலீசார் உரிய கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆமை வேகத்தில் நடந்து வரும் பென்னாகரம் புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை விரைவாக முடித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி

மோட்டுபட்டியை சேர்ந்த ஆறுமுகம்:

பென்னாகரம் நகரம், சுற்றுவட்டார பகுதிகளுக்கு முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது. ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு செல்லும் ஆயிரக்கணக்கானோர் பென்னாகரம் பஸ் நிலையத்திற்கு வந்தே செல்ல வேண்டும். இதை கருத்தில் கொண்டு தற்போது மேம்படுத்தப்பட்ட பஸ் நிலையம் கட்டுவதற்கான பணி நடந்து வருகிறது. இந்த பணியை விரைவு படுத்த வேண்டும். தற்போது மாற்று இடத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டும்.

பொச்சாரம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ்:

பென்னாகரத்திற்கு வெளியூர்களில் இருந்து வந்து செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பென்னாகரத்தில் செயல்படும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சை பெற சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு பென்னாகரத்தில் நடந்து வரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை விரைவு படுத்த வேண்டும். தற்போது செயல்படும் தற்காலிக பஸ் நிலையத்திற்கு வரும் பெண் பயணிகள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.

விரைவாக முடிக்க வேண்டும்

பென்னாகரத்தைச் சேர்ந்த அம்சலட்சுமி:

பென்னாகரம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள், ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு பஸ்களில் வரும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் பென்னாகரத்திற்கு வந்து செல்கிறார்கள். அதற்கேற்ப தேவையான அடிப்படை வசதிகளுடன் இங்குள்ள பஸ் நிலையத்தை மேம்படுத்தும் பணி நடக்கிறது. இந்த பணியை விரைவாக முடித்து பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதுவரை தற்போது பஸ்கள் நிற்கும் பகுதியில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்