திருமயத்தில் கால்நடை மருந்தக புதிய கட்டிடம்

திருமயத்தில் கால்நடை மருந்தக புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.

Update: 2023-07-20 19:06 GMT

திருமயம் ஒன்றியம் கே.பள்ளிவாசல் கிராமத்தில் புதிதாக கால்நடை மருந்தக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் வருமுன் காப்போம் திட்டம், கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் உள்ளிட்ட மருத்துவ திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் திருமயம் ஒன்றியம், கே.பள்ளிவாசல் கிராமத்தில், நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.34.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள, கால்நடை மருந்தக புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு வருடந்தோறும் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் மருந்துகள் அரசால் வழங்கப்படும். மேலும் ரூ.60 ஆயிரம் மதிப்பில் அறையணிகள் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பில் சிகிச்சை உபகரணங்கள் அரசால் வழங்கப்படும். எனவே இந்த கால்நடை மருந்தகத்தை பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு, தங்களது கால்நடைகளை நோயின்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும் சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிக்க வேண்டும். நாட்டு மாடுகளை கிராமப்புற மக்கள் வளர்த்து தங்களது குடும்ப பொருளாதாரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றார். இதில் ஒன்றிய செயலாளர்கள், பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்