குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும் -யூனியன் கவுன்சிலர் சிவசங்கீதா ராஜாராம் தகவல்
திருவாடானை யூனியன் வட்டாணம், கலியநகரி, புல்லக்கடம்பன் ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் கவுன்சிலர் சிவ சங்கீதா ராஜாராம் தெரிவித்தார்.
தொண்டி,
திருவாடானை யூனியன் வட்டாணம், கலியநகரி, புல்லக்கடம்பன் ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் கவுன்சிலர் சிவ சங்கீதா ராஜாராம் தெரிவித்தார்.
13-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர்
திருவாடானை யூனியன் 13-வது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சிவ சங்கீதா ராஜாராம். இவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரது வார்டுக்கு உட்பட்ட வட்டாணம், கலிய நகரி, புல்லக்கடம்பன் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களின் தேவைகளை அறிந்து காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மக்களுக்கு தேவையான வசதிகளை நிறைவேற்றி வருகிறார்.
இதுகுறித்து யூனியன் கவுன்சிலர் சிவ சங்கீதா ராஜாராம் கூறியதாவது:-
திருவாடானை யூனியன் கலியநகரி ஊராட்சி அழகன் வயல் கிராமத்தில் 10 ஆண்டுகளாக நிலவிய குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு உள்ளது. அதன்படி புதிய குழாய்கள் அமைத்து சீரான முறையில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுத்து உள்ளேன்.
படித்துறை
அதேபோல் சோழகன்பேட்டை கிராமத்தில் மாரியம்மன் கோவில் முன்பு பேவர் பிளாக் சாலை, மச்சூர் பள்ளிவாசல் அருகில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடவயல், வட்டாணம், நந்தியான் கோட்டை, நல்கிராமவயல் ஊருணிகளில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று படித்துறை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பாசிபட்டினம் கிராமத்தில் வடக்கு தெரு மீனவர் சாலையில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மாணவநகரி கிராமத்தில் பாலம் அமைத்து பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நவாஸ்கனி எம்.பி. நிதியின் கீழ் வட்டாணம், தீர்த்தாண்ட தானம், பாசிப்பட்டினம் ஆகிய கிராமங்களில் உயர் மின் கோபுர விளக்கு வசதி செய்து தர வலியுறுத்தியுள்ளேன். பாசிப்பட்டினம் கிராமத்திற்கு நாடக மேடை மற்றும் பாசிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என கருமாணிக்கம் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படும்
வட்டாணம், கலிய நகரி, தீர்த்தாண்டதானம் கிராமங்களில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்து உள்ளேன்.
இதேபோல் பாசி பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இடையன் வயல் கிராமத்தில் உள்ள ராமர் பாதம் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலை கழிப்பறை, சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், குடிநீர் வசதி அலங்கார ஊருணிகள், மராமத்துப் பணிக்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பணியை நிறைவேற்றி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.