நெல்லை கார் விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு...!

நெல்லை கார் விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2023-07-06 07:21 GMT

நெல்லை,

நெல்லையை அடுத்த ராமையன்பட்டி சங்கு முத்தம்மாள் தெருவை சேர்ந்த இளம்பெண்ணுக்கு, நாங்கு நேரியை அடுத்த முதலைகுளம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் நேற்று ராமையன்பட்டியில் திருமணம் நடந்தது. மாலையில் புதுமண தம்பதிகளை முதலைகுளத்தில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு உறவினர்கள் 2 கார்களில் அழைத்துச் சென்று விட்டுள்ளனர். பின்னர் நள்ளிரவில் அங்கிருந்து பெண் வீட்டார் தங்களது சொந்த கிராமத்திற்கு திரும்பினர்.

அப்போது ஒரு காரில் சாமித்துரை(வயது 40), பிரவீன்(21), கண்ணன், நவீன், முத்துக்குமார், பத்திரகாளி, சாம்சன்பிரபு, லெட்சுமணன், மற்றொரு முத்துக்குமார், மற்றொரு கண்ணன் ஆகிய 10 பேர் பயணம் செய்தனர். காரை நவீன் ஓட்டி வந்தார். மற்றொரு கார் அவர்கள் பின்னால் வந்தது. நவீன் ஓட்டிய கார் நெல்லையை அடுத்த பொன்னாக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் வந்தபோது பேரின்பபுரம் விலக்கு பகுதியில் சாலையில் தேங்கி இருந்த மழை நீரால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சாலை முழுவதும் ஈரமாக இருந்ததால் சிறிது தூரத்திற்கு கார் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் சாமித்துரை மற்றும் பிரவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த கண்ணன், நவீன், முத்துக்குமார், பத்திரகாளி, சாம்சன்பிரபு, லெட்சுமணன், மற்றொரு முத்துக்குமார், மற்றொரு கண்ணன் ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனே அவர்களது காரின் பின்னே மற்றொரு காரில் வந்த உறவினர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த முன்னீர்பள்ளம் போலீசார் இறந்த 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த லெட்சுமணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த பிரவீன் டிரைவராகவும், சாமித்துரை கறிக்கடையிலும் வேலை பார்த்து வந்தனர். இந்த விபத்து தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்