நெல்லை- தென்காசியில் இடி, மின்னலுடன் பலத்த மழை
தென்காசி, செங்கோட்டையில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. செங்கோட்டையில் தென்னை மரத்தில் தீப்பிடித்தது.
தென்காசி, செங்கோட்டையில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. செங்கோட்டையில் தென்னை மரத்தில் தீப்பிடித்தது.
பலத்த மழை
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து வெயில் அடித்தது. இந்தநிலையில் கடையநல்லூர், அச்சன்புதூர், இடைகால், நயினாரகரம் மற்றும் கடையநல்லூரை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை 6 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் வரை பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் தென்காசியில் இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. குற்றாலத்தில் சுமார் அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது.
தென்னை மரத்தில் தீப்பிடித்தது
செங்கோட்டையில் நேற்று இரவு 7 மணி முதல் 8.15 மணி வரை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதையொட்டி செங்கோட்டை வனத்துறை அலுவலகம் எதிர்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் திடீர் என்று தீப்பிடித்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். திடீர் மழையால் மின்சாரம் பல மணி நேரம் தடைப்பட்டது. இதனால் நகரம் இருளிலில் மூழ்கியது.
இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. திடீரென இடி மின்னல் இருந்ததால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக சென்று மின்வினியோகத்தை சீர் செய்தனர். ஒரு சில இடங்களில் மின்வினியோகம் வழங்க முடியாமல் இருந்தது. இரவு நேரம் என்பதால் மின்தடைக்கான காரணத்தை கண்டுபிடிக்க சிரமப்பட்டனர். ஆனாலும் பெரும்பாலான இடங்களில் மின் வினியோகம் வழங்கப்பட்டது.
தென்னையில் தீ
இதேபோல் செங்கோட்டை அருகே சீவநல்லூர் கிராமத்தில் சட்டநாதன் நகரில் தென்னை மரத்தில் மின்னல் தாக்கி தீப்பிடித்தது. தீயணைப்பு வீரா்கள் வருவதற்குள், மழையால் தீ அணைந்தது. கடந்த ஒரு மாத காலமாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.