நெல் தரிசில் பயிறு வகைகள் சாகுபடி செய்வது குறித்து விழிப்புணர்வு முகாம்

Update: 2022-12-22 16:18 GMT


நத்தக்காடையூர் அருகே நெல் தரிசில் பயிறு வகை சாகுபடி செய்வது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பயிறு வகைகள் சாகுபடி

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் நத்தக்காடையூர் அருகே உள்ள பழைய கோட்டை கிராமத்தில் நெல் தரிசில் பயிறு வகைகள் சாகுபடி செய்வது குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று காலை நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தாமணி தலைமை தாங்கினார். துணை வேளாண்மை அலுவலர் ரமேஷ் வரவேற்று பேசினார்.

முகாமில் மாவட்ட தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் கலந்துகொண்டு இப்பகுதிகளில் வருகிற பிப்ரவரி மாதம் 2-வது வாரம் நஞ்சை சம்பா நெல் சாகுபடி அறுவடை பணிகள் முடிவடைந்த பின்பு நெல் தரிசில் பயிறு வகை சாகுபடி செய்யும் வழிமுறைகள், வேளாண் தொழில்நுட்பங்கள், விளைச்சல் அதிகரிப்பு தொழில்நுட்பங்கள், மஞ்சள் தேமல் நோய் தாக்காமல், 70 நாட்களில் பலன் தரக்கூடிய வம்பன் 8, 10 ஆகிய புதிய ரக பயிறு வகைகள் சாகுபடி செய்வதன் நன்மைகள், கூடுதல் பலன் பெறும் வழிமுறைகள், காற்றில் தழைச்சத்து நிலை நிறுத்தும் வழிமுறைகள், மண் வளத்தை மேம்படுத்தும் வழிமுறைகள், விதை நேர்த்தி கடைப்பிடித்தல், நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், நுண்ணுயிர் தழைச்சத்து உரம் விதை நேர்த்தி மேற்கொள்ளும் வழிமுறைகள், இலைவழி உரம் இடும் வழிமுறைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, விதை கிராம திட்டத்தின் கீழ் பயிறு வகை சாகுபடி செய்வதற்கு விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகியவற்றிக்கு வேளாண்மைத் துறை மூலம் வழங்கப்பட்டு வரும் மானிய உதவி திட்டங்கள் ஆகியவைகள் பற்றி சுற்றுவட்டாரவிவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார்.

விழிப்புணர்வு கையேடு

முடிவில் பயிறு வகை சாகுபடி தொழில்நுட்பங்கள் அடங்கிய விழிப்புணர்வு கையேடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. முகாமில் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட தொழில் நுட்ப உதவியாளர் கிருத்திகா, அட்மா தொழில்நுட்ப மேலாளர் தேவராஜ் மற்றும் வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள், அட்மா திட்ட பணியாளர்கள் சுற்று வட்டார விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் ஜோதீஸ்வரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்