விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

குமாரபாளையத்தில் விசைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்வு பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் தோல்வியில் முடிவடைந்தது.

Update: 2023-02-17 18:45 GMT

குமாரபாளையம்

விசைத்தறி தொழிலாளர்கள்

குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் விசைத்தறிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் 75 சதவீதம் கூலி உயர்வு வழங்கக்கோரி 2 வாரங்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, ஏற்கனவே நான்கு முறை விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் நேற்று குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேலு முன்னிலையில் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், கூலிக்கு நெசவு செய்யும் தறி உரிமையாளர்கள் பங்கேற்ற கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை தோல்வி

இதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் 10 சதவீதம் கூலி உயர்வு வழங்குவதாக தெரிவித்துள்ளதால், அதனை அப்படியே தொழிலாளர்களுக்கு வழங்குவதாக தறி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் குறைந்தபட்சம் 20 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனால் நேற்று இரவு வரையில் சுமார் 5 மணி நேரமாக நீடித்த பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் ஏற்படாமல் மீண்டும் தோல்வியில் முடிவடைந்தது.

இதனால், தொழிலாளர்கள் மத்தியில் கடுமையான ஏமாற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, திருச்செங்கோடு உதவி கலெக்டர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்