ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து பேச்சுவார்த்தை

முதல்-அமைச்சர் வருகையின்போது ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.

Update: 2022-06-12 16:56 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி 3 மற்றும் 7-வது வார்டு பகுதிகளான சிவராஜ் பேட்டை, போஸ்கோ நகர், அம்பேத்கர் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, பழனிச்சாமி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,500 குடும்பத்தினர் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசித்து வருவதாக கூறி, ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் வருகிற 21-ந் தேதி முதல்-அமைச்சர் வரும்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இதனையொட்டி திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் அறிவித்தவர்களுடன், ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், நகராட்சி கவுன்சிலர்கள் சரவணன், சதீஷ்குமார், பா.ஜ.க. பொதுச் செயலாளர் கண்ணன் உள்பட அப்பகுதி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு அங்கு வசிப்பவர்களுக்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு அதில் குடியமர்த்தப்பட்ட பின்னர் தான் ஆக்கிரமிப்பு அகற்றப்படும், எனவே யாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், நாளை (செவ்வாய்க்கிழமை) தாசில்தார் தலைமையில் அப்பகுதி முக்கிய பிரமுகர்களை அழைத்து அமைதி கூட்டம் நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்