நெகமம் ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும்

பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவை பிரித்து நெகமம் ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-19 14:26 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவை பிரித்து நெகமம் ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். முன்னதாக மாநில இணை செயலாளர் சிக்கந்தர் பாட்சா வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் அரசு பணியாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு திட்ட பணிகளை உரிய காலத்தில் அளிக்காமல், பணிகளை முடிக்க மாவட்ட நிர்வாகம் அவசரப்படுத்தும் நிலையினை கைவிட வேண்டும், கோவை மாவட்டத்தில் கலைக்கப்பட்ட வால்பாறை ஊராட்சி ஒன்றியத்தை மீண்டும் உருவாக்க வேண்டும், பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றியங்களை பிரித்து நெகமத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்க வேண்டும்,

காலமுறை ஊதியம்

இதேபோன்று மாவட்டத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை பிரிக்க வேண்டும், ஒன்றியங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டம், முழு சுகாதார திட்டம், மகளிர் திட்டம் உள்ளிட்ட சிறப்பு திட்ட பணிகளை மேற்கொள்ள புதிதாக வட்டார அளவில் தனியாக ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும்,

ஊரக வளர்ச்சி துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், விரைவில் மாநில மாநாடு நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுரவ தலைவர் ஜெயச்சந்திரன், மாநில பொதுச்செயலாளர் முத்துக்குமார், மாநில பொருளாளர் செல்லப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட பிரசார செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்