உக்ரைன் மருத்துவ மாணவர்களை தமிழகத்தில் சேர்ப்பதற்கு நீட் தடையாக உள்ளது - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
உக்ரைன் மருத்துவ மாணவர்களை தமிழகத்தில் சேர்ப்பதற்கு நீட் தடையாக உள்ளது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் முத்துக்குமரனின் உடலுக்கு மரியாதை செலுத்திய பின்னர் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
வேலை நிமித்தமாக முத்துக்குமரன் சென்று அங்கு உயிரிழந்து இருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அயலக தமிழர்களுக்கான துறை இருக்கிறது. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறைப்படி பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த துறையை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை பற்றி விழிப்புணர்வு வேண்டும்.
வெளிநாடுகளில் வேலைக்கு சென்றவர்களில் கடந்த ஆண்டில் 152 பேரும், இந்த ஆண்டு 116 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உடலை மீட்டு கொண்டு வந்துள்ளோம்.
அதே போல் வெளிநாட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று கடந்த ஆண்டு 315 பேரும், இந்த ஆண்டு 311 பேரும் கோரிக்கை முன் வைத்திருந்தனர். அவர்களை நாங்கள் அழைத்து வந்துள்ளோம்.
உக்ரைனிலிருந்து மருத்துவப்படிப்பை பாதிலேயே விட்டு வந்த மாணவர்களை மருத்துவப்படிப்பில் தமிழகத்தில் சேர்ப்பதற்கு நீட் ஒரு தடையாக உள்ளது. பொறியியல், வேளாண்மை படிப்பை பாதிலியே விட்டு உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களுக்கு தமிழக கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என முதல்-அமைச்சர் கூறி உள்ளார். ஆனால் மருத்துவப்படிப்பில் சேர்க்க முடியாத நிலை நீட்டால் உள்ளது. எனவே அந்த மாணவர்களுக்கும் உரிய மருத்துவப்படிப்பு இங்கேயே வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.
வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறையாக பதிவு செய்துவிட்டு செல்வது மிக முக்கியமான ஒன்று இது குறித்த விழிப்புணர்வு நமக்கு கட்டாயம் தேவை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.