கொரோனா தொடர்பான தேவைகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்

வாலாஜா அரசு மருத்துவ மனையில் கொரோனா தொடர்பான தேவைகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

Update: 2023-04-10 18:13 GMT

கலெக்டர் ஆய்வு

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகை நடைபெற்றது. இதனை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒத்திகை நிகழ்ச்சியின் போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை ஆம்புலன்சில் கொண்டு வந்து கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு காய்ச்சல், ஆக்சிஜன் அளவு ஆகிய பரிசோதனைகள் பரிசோதிக்கப்பட்டு அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகள், ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் தாங்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு கவசங்கள், முகக் கவசங்கள், கையுறைகள் ஆகியவைகளை வார்டில் இருந்து வெளியேறிய பின்பு முறையாக அப்புறப்படுத்துவதையும், நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் கட்டமைப்பையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

40 படுக்கைகள்

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் மொத்தம் 330 படுக்கைகள் உள்ளன. 18 ஐ.சி.யூ. படுக்கைகள், 38 வென்டிலேட்டர் படுக்கைகளுடன் கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது. தற்போது கொரோனா சிறப்பு வார்டில் முதல் தளத்தில் 20 படுக்கைகளும், இரண்டாம் தளத்தில் 20 படுக்கைகளும் என 40 படுக்கைகள் இதற்கென ஒதுக்கப்பட்டு உள்ளது.

மருத்துவமனைக்கு எதிரே கடந்த ஆண்டு செயல்பட்ட சிறப்பு வார்டிலும் படுக்கைகள் தயார் படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் பிளான்ட் தயார் நிலையில் இருப்பதாகவும் மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.

தெரிவிக்க வேண்டும்

கொரோனா தொற்று தொடர்பான தேவைகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். மேலும் மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் அனைவரையும் முகக் கவசம் அணிவதை மருத்துவமனை நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, தலைமை மருத்துவர் உஷாநந்தினி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்