கட்சி மாறினால் பதவியை பறிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்- பழ.நெடுமாறன்

கட்சி மாறினால் பதவியை பறிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என பழ.நெடுமாறன் கூறினார்.

Update: 2022-07-03 18:00 GMT

கட்சி மாறினால் பதவியை பறிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என பழ.நெடுமாறன் கூறினார்.

பயிற்சி முகாம்

திருச்சி மண்டல அளவிலான தமிழர் தேசிய முன்னணியின் செயல்வீரர்கள் பயிற்சி முகாம் நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் டாக்டர் பாரதிசெல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராசசேகரன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஈழத்தமிழர்கள்

மனிதாபிமான அடிப்படையில், பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு மத்திய, மாநில அரசுகள் உதவிப்பொருட்கள் வழங்குவது வரவேற்கத்தக்கது. அதேசமயம், அந்த உதவிப்பொருட்கள் அனைத்தும் ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிக்கும் சமமாக பிரித்து வழங்கப்படுகிறதா? என்பதை உற்றுநோக்க வேண்டும்.

இந்த உதவி பொருட்களை இலங்கை அரசின் மூலம் வழங்குவதை விடுத்து, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்கினால் அனைத்து தரப்பினருக்கும் சமமாக உதவிப்பொருட்கள் சென்றடையும்.

பதவி பறிப்பு

மக்கள் வாக்களித்து வெற்றி பெற்ற பின்னர், வேறு கட்சிக்கு பதவி, பணம் பெறும் நோக்கத்தில் மாறுகின்ற நடவடிக்கை அப்பட்டமான ஜனநாயக படுகொலை ஆகும். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் ஜனநாயகத்துக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும். எனவே கட்சி தாவல் சடை சட்டம் முற்றிலும் திருத்தப்பட வேண்டும். தேர்தலில் ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் வேறு கட்சிக்கு மாறினால் உடனடியாக அந்தப்பதவியை பறிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

விடுதலை செய்ய நடவடிக்கை

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு சொல்லப்பட்ட அனைத்து சட்ட விதிமுறைகளும் மற்ற 6 பேருக்கும் பொருந்தும்.

தமிழக அரசு, இந்த விஷயத்தில் மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் கொண்ட அரசாக உள்ளபடியால் தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு 6 பேரையும் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் மாவட்ட செயலாளர் அரிஹரன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்