பொங்கல் விழாவை முன்னிட்டு போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரிக்க தயாராகும் கழுத்து மணிகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை அலங்கரிக்கும் வகையில் அதன் கழுத்தில் கட்டப்படும் மணிகள் தயாரிப்பு பணி சிங்கம்புணரி பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-12-20 20:03 GMT

சிங்கம்புணரி, 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை அலங்கரிக்கும் வகையில் அதன் கழுத்தில் கட்டப்படும் மணிகள் தயாரிப்பு பணி சிங்கம்புணரி பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அலங்கார கழுத்து மணி

தை மாதம் நெருங்கி வந்தாலே கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும். தை பொங்கலை முன்னிட்டு தென்மாவட்டங்களான சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட தமிழர்களின் வீர விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுவது வழக்கம். அடுத்த மாதம் தை பிறக்க உள்ளதால் தற்போது பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை கால்நடை வளர்ப்பவர்கள் தயார் செய்து வருகின்றனர்.

இந்த போட்டிகளில் கலந்துகொண்டு விளையாட உள்ள காளைகளை அழகுபடுத்தும் வகையில் அதன் கழுத்து பகுதியில் மணிகளை இணைத்து அலங்கார மாலையாக அணிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த அலங்கார மணிகள் சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மணிகள் தரமானதாகவும், கெட்டியான எடை கொண்டதாகவும் உள்ளதால் இதை வாங்குவதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளை வளர்ப்போர் இங்கு வந்து ஆர்டர்கள் கொடுத்து அதை வாங்கி செல்கின்றனர்.

தயாரிப்பு பணி தீவிரம்

இங்கு அரியக்குடி மணி, வெங்கநாயக்கன்பட்டி மணி, கும்பகோண மணி, சிங்கம்புணரி மணி உள்ளிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் மணிகளை வாங்கி வந்து அதை பெல்ட் போன்ற லெதர் தோலில் இணைத்து அதன் இடையே அழகிய பல்வேறு வண்ணங்களில் உள்ள குஞ்சம் இணைத்து மணிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை காளையின் கழுத்தில் அணியும் போது ஜல், ஜல் என்ற அழகிய ஓசையுடன் செல்வதால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கும்.

இந்த அலங்கார கழுத்து மணிகள் தற்போது சிங்கம்புணரி பகுதியில் மும்முரமாக தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மணிகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாபு கூறியதாவது:- எனது குடும்பத்தினர் 3 தலைமுறையாக இந்த அலங்கார மணி தயாரிக்கும் பணி செய்து வருகிறோம். அதிலும் தை பொங்கல் உள்ளிட்ட சீசன் காலங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறுவதால் இந்த மணிகள் தயாரிப்பு பணிகள் அதிகமாக இருக்கும். மற்ற காலங்களில் செருப்பு தைக்கும் பணியை மட்டும் செய்வோம்.

விலை உயர்வு

மணிகளை தயார் செய்யும் போது விரதமிருந்து இதை தயாரிப்போம். இங்கு 5,7,9,11 ஆகிய ஒற்றை படை வரிசை கொண்ட மணிகளை லெதர் பெல்ட்டில் வைத்து தைத்து அதன் நடுவே அழகிய குஞ்சம் வைத்து தயாரிக்கப்படுவதால் காளையின் கழுத்தில் அணியும் போது மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். மணிகளை வாங்குவதற்காக உசிலம்பட்டி, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து ஆர்டர்கள் கொடுத்து வாங்கி செல்கின்றனர் என்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மணிகளை வாங்க வந்த சக்தி கூறியதாவது:- தை பொங்கல் விழாவிற்காக எனது காளையை தயார் செய்து வைத்துள்ளேன். சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து இங்கு வந்து மணிகளை வாங்கி உள்ளேன். இங்கு தயாரிக்கப்படும் மணி நல்ல தரமானது, அதிக நாட்கள் உழைக்கும் தன்மை கொண்டது. இவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலைவாசி உயர்வு காரணமாக ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்