கிராமப்புற சாலைகளை சீரமைக்க தேவையான நிதி ஒதுக்க வேண்டும்-மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தல்

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமப்புற சாலைகளை சீரமைக்க போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2022-11-03 18:57 GMT

சிவகாசி, 

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமப்புற சாலைகளை சீரமைக்க போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

54 கிராமங்கள்

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் 54 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நீடிக்கிறது. அரசு ஒதுக்கும் நிதியை கொண்டு முடிந்தவரை பஞ்சாயத்து நிர்வாகங்கள் வளர்ச்சி பணிகளை செய்து கொடுத்தாலும் பொதுமக்களின் எதிர்பார்ப்பும், கோரிக்கையும் நீண்டு கொண்டே செல்கிறது. குறிப்பாக நவம்பர் 1-ந்தேதி நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தின் போது கலந்து கொண்ட பொதுமக்கள் பலர் தங்களது பகுதிக்கு தரமான தார் சாலை வேண்டும் என்ற கோரிக்கையை அதிகளவில் முன் வைத்தனர்.

எஸ்.என்.புரம்

சிவகாசி யூனியனில் உள்ள சில முதல்நிலை பஞ்சாயத்துக்களில் பல இடங்களில் போதிய சாலை வசதி இல்லாத நிலை நீடிக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் உரிய பலன் கிடைக்காத நிலை இருக்கிறது. இது குறித்து எஸ்.என்.புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சப்தகிரி நகரில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் கூறியதாவது:-

நான் இந்த பகுதியில் வீடு கட்டி குடிவந்து 3 வருடங்கள் ஆகிறது. எனக்கு பின்னர் பலரும் இந்த பகுதியில் புதிய வீடுகள் கட்டி குடிவந்துள்ளனர். ஆனால் போதிய சாலை வசதி இல்லை. இதனால் நாங்கள் மழை காலங்களில மிகவும் அவதிப்படுகிறோம் என்றார்.

நிதி ஒதுக்க கோரிக்கை

இதே போல் நாரணாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மகாத்மாகாந்தி நகர் பகுதியில் போதிய சாலை வசதி இல்லாத நிலையும், விஸ்வநத்தம் பூலாவூரணி, அனுப்பன்குளம், நமஸ்கரித்தான்பட்டி, மாரனேரி ஆகிய பஞ்சாயத்துக்களிலும் தார் சாலைகள் அமைக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் புதிய தார் சாலை அமைக்க போதிய நிதியை பஞ்சாயத்து நிர்வாகங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்