விளாத்திகுளம் அருகே தரமான சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
விளாத்திகுளம் அருகே தரமான சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோட்டூர்-குறுக்குச்சாலை நெடுஞ்சாலையில் முள்ளூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்த கண் பாலம் ஒன்று கடந்த ஆண்டு பருவமழையின் போது காட்டாற்று வெள்ளத்தால் முற்றிலும் சேதம் அடைந்தது.
இதையடுத்து இந்த கண் பாலத்திற்கு பதிலாக புதிதாக பெரிய அளவில் 4 முதல் 5 கண்கள் கொண்ட பாலம் அமைத்து தரும்படி அரசிடம், கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பயனாக முள்ளூர் கிராமத்தில் சேதம் அடைந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
ஆனால் கிராம மக்கள் கோரிக்கை வைத்தது போல் 4 முதல் 5 கண்கள் கொண்ட பெரிய பாலம் அமைக்கப்படாமல் 1 கண் கொண்ட பாலம் கட்டுமான பணி நடைபெற்று உள்ளதாகவும், அதன் மீது போடப்பட்ட தார் சாலையும் கைகளால் பெயர்த்து எடுக்கக்கூடிய அளவில் தரமற்று இருப்பதாகவும் கிராமமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே அந்த பாலம், தார்சாலையை தரமாக அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் ஒருவரும், பெண் அதிகாரி ஒருவரும் பேசுவது போல் ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.