வல்லநாடு அருகேஆம்னி கார்-லோடு ஆட்டோமோதல்; 6 பேர் படுகாயம்
வல்லநாடு அருகே ஆம்னி காரும், லோடு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவைகுண்டம்:
வல்லநாடு அருகே ஆம்னி காரும், லோடு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டதில் 2 டிரைவர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
குற்றாலத்துக்கு...
தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் சரத்குமார். இவரும், நண்பர்களான விக்கி, செல்டன், அஜீத், சாஹிர் ஆகிய 5 பேரும் நேற்று தூத்துக்குடியில் இருந்து குற்றாலத்திற்கு ஆம்னி காரில் சென்றனர். குற்றாலத்தில் குளித்து விட்டு மீண்டும் தூத்துக்குடி சண்முகபுரத்திற்கு அதே காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நெல்லை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் முறப்பநாடு பாலத்தில் ஒருவழி பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில் தாமிரபரணி ஆற்று பாலம் அருகேயுள்ள பக்கப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது, எதிரே தூத்துக்குடியில் இருந்து வந்த லோடு ஆட்டோவும் ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
6 பேர் படுகாயம்
இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அதில் இருந்த சரத்குமார், விக்கி, செல்டன், அஜீத் மற்றும் டிரைவர் சாஹிர் உள்ளிட்ட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். எதிரே வந்த தூத்துக்குடியை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் மனோகரனும் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயங்களுடன் கிடந்த 6 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.