வல்லநாடு அருகேதாமிரபரணி ஆற்றில்தடுப்பணை கட்ட வேண்டும்:கலெக்டரிடர் செந்தில்ராஜிடம் கோரிக்கை

தாமிபரணி ஆற்றில் வல்லநாடு அருகே 50 கிராமங்கள் பயன்பெறும் வகையில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடர் செந்தில்ராஜிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-10 18:45 GMT

தாமிபரணி ஆற்றில் வல்லநாடு அருகே 50 கிராமங்கள் பயன்பெறும் வகையில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடர் செந்தில்ராஜிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடந்த வாரம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்த செய்துங்கநல்லூரை சேர்ந்த மலைவாழ் குறவர்களுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுத்து வீட்டுமனைப்பட்டாவை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று வழங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

காங்கிரஸ் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தாமிரபரணி ஆற்றில் வல்லநாடு அருகே தடுப்பணை கட்டினால் இந்த பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, தாமிரபரணி ஆற்றில் வல்லநாடு அருகே தடுப்பணை கட்ட தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.

சரக்கு பெட்டக முனையம்

தூத்துக்குடி வ.உ.சி துறைமுக 7-வது கப்பல் தளத்தில் செயல்படும் தனியார் சரக்கு பெட்டக முனைய தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தொழிலாளர்களுக்கு 1.1.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனே தொடங்கி, 40 சதவீதத்துக்கு குறையாமல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கப்பல் பணி இல்லாத நாட்களில் லேசிங் தொழிலாளர்கள் மற்றும் பிரைமூவர் ஓட்டுநர்களுக்கு முனையத்தில் மாற்று வேலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரல் 24-ந் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்று கூறி உள்ளனர்.

கோவில்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் செயல்படும் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் வரும் கல்வி ஆண்டு முதல் இலவச கட்டாய கல்வி திட்டம் கிடையாது எனவும், ஏற்கனவே இந்த திட்டத்தில் பயின்று வரும் மாணவர்கள் முழு கல்விக் கட்டணமும் செலுத்த வேண்டும் என தெரிவித்து உள்ளனர். இந்த பள்ளியில் இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் சுமார் 100 பேர் படித்து வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் இந்த மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும். எனவே, இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து அந்த திட்டத்திலேயே கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

பஸ் நிறுத்தம்

இந்து தேசிய கட்சி மாவட்ட தலைவர் கே.ஜே.சிங் தலைமையில் நிர்வாகிகள் கைகளில் மண், கல், சட்டிகளை ஏந்தியவாறு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், சாத்தான்குளம் தாலுகா முதலூர் பஞ்சாயத்து அன்பின் நகரத்தில் நல்ல முறையில் இருந்த பஸ் நிறுத்தம் மற்றும் தொலைக்காட்சி அறையை இடித்து அகற்றி உள்ளனர். இது தொடர்பாக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, போலீசாரிடம் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த விசயத்தில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

பஸ் வசதி

கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மத்திய அரசு சார்பில் ஆயுஷ் மான் பாரத் என்ற பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வீடற்றவர்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், நிலமற்றவர்கள், தினக்கூலிகள் என சில தரப்பினர் மட்டுமே பயன்பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் அனைத்து தரப்பு சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும். மேலும், கோவில்பட்டியில் இருந்து கடலையூர்- கருப்பூர் வழியாக முத்துலாபுரத்துக்கு மகளிர் கட்டணமில்லா பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், சீர்மரபினருக்கு தமிழகத்தில் டி.என்.சி. என்று சாதிச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதே வேளையில் மத்திய அரசின் உரிமைகளை பெற டி.என்.டி. என்று தனியாக சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த இரட்டை சான்றிதழ் முறையை ரத்து செய்துவிட்டு, 68 சமூக சீர்மரபினருக்கும் டி.என்.டி. என்ற ஒரே சாதிச்சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்