உளுந்தூர்பேட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் தைரியம். இவருடைய மகன் அருண் கில்பர்ட்(வயது 18). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இதை அவருடைய தாய் சுபாமேரி கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த அருண் கில்பர்ட் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அருண் கில்பா்ட்டின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாாின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.