தூத்துக்குடி அருகே போலீஸ் பயிற்சி முடித்த பெண் போலீசாரின் அணிவகுப்பு

தூத்துக்குடி அருகே போலீஸ் பயிற்சி முடித்த பெண் போலீசாரின் அணிவகுப்பை ஆவடி போக்குவரத்து மற்றும் தலைமையக பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் பா.விஜயகுமாரி பார்வையிட்டார்.

Update: 2022-10-19 18:45 GMT

தூத்துக்குடி அருகே போலீஸ் பயிற்சி முடித்த பெண் போலீசாரின் அணிவகுப்பை ஆவடி போக்குவரத்து மற்றும் தலைமையக பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் பா.விஜயகுமாரி பார்வையிட்டார்.

போலீஸ் பயிற்சி

தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 448 ஆயுதப்படை இரண்டாம் நிலை பெண் காவலர்கள் பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களுக்கு முதன்மை சட்ட போதகர் ஜேன்றஸ் பாபுனி, முதன்மை கவாத்து போதகர் பாஸ்கர் ஆகியோர் தலைமையிலான குழுவினரால் 7 மாத கால அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. இதில் கவாத்து, துப்பாக்கி சுடுதல், வாகனம் ஓட்டுதல், யோகா, நீச்சல் மற்றும் கராத்தே, சிலம்பம், இந்திய தண்டனை சட்டம், குற்ற விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், போலீஸ் துறை வரலாறு, அமைப்பு, நிர்வாகம் மற்றும் தனி, உள்ளூர் சட்டங்கள், போலீசாரின் திறமை, கடமை, போலீஸ் துறை பதிவேடுகள், போலீசாரின் பங்கு, சிறு சட்டங்களுடன செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.

அணிவகுப்பு

இதனை தொடர்ந்து அவர்களுக்கான பயிற்சி முடிந்து, பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு பயிற்சி பள்ளி முதல்வர் ராசராசன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜஸ்டின் ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆவடி போக்குவரத்து மற்றும் தலைமையக பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் பா.விஜயகுமாரி கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பதக்கங்களை வழங்கி பேசினார்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா, தூத்துக்குடி மாவட்ட ஊரக உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்