தூத்துக்குடி அருகே வழிப்பறி திருடர்கள் 4 பேர் கைது
தூத்துக்குடி அருகே வழிப்பறி திருடர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி அருகே வாலிபரிடம் அரிவாளைகாட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள், செல்போன், பணத்தை பறித்து சென்ற வழிப்பறி திருடர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் மீட்கப்பட்டது.
வழிப்பறி
தூத்துக்குடி தெற்கு சிலுக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகராஜ் மகன் மகேந்திரகுமார் (வயது 23). இவர் கடந்த 17-ந்தேதி இரவு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அவர் தெற்கு சிலுக்கன்பட்டி ரோட்டில் உள்ள தட்டாப்பாறை விலக்கு அருகில் சென்றபோது, மர்ம கும்பல் அவரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். திடீரென்று அவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
4 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், திருமலையாபுரம் ஆறுமுக தங்கநகர் ராஜசேகர் மகன் கருப்பசாமி (24), திருமலையாபுரம் நடுத்தெரு மாசாணமுத்து மகன் செல்வகணேஷ் (21), திருச்செந்தூர் குதிரை வண்டிக்கார தெரு மாரியப்பன் மகன் செந்தில்நாதன் (23) மற்றும் திருமலையாபுரம் மெயின் ரோடு பட்டுராஜ் மகன் அருண்குமார் (27) ஆகியோர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
பழைய குற்றவாளிகள்
இதனையடுத்து புதுக்கோட்டை போலீசார் கருப்பசாமி, செல்வகணேஷ், செந்தில்நாதன், அருண்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட கருப்பசாமி மீது ஏற்கனவே புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் 7 வழக்குகளும், சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் என 8 வழக்குகள் உள்ளது. செல்வகணேஷ் மீது புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் திருட்டு உட்பட 2 வழக்குகளும், சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், சாயர்புரம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் என 4 வழக்குகள் உள்ளது. அதுபோல் செந்தில்நாதன் மீது தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், கும்பகோணம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் என 4 வழக்குகள் உள்ளன. அருண்குமார் மீது புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், சாயர்புரம் போலீஸ் நிலையத்தில் திருட்டு உட்பட 2 வழக்குகளும், சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் என 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.