திருப்பரங்குன்றம் அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

திருப்பரங்குன்றம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-08-22 21:03 GMT

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

வெட்டிக்கொலை

திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் மூனாண்டிப்பட்டியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் வசந்தகுமார் (வயது 24). இவர் நேற்று மாலையில் திருநகரை அடுத்த தனக்கன்குளம் பி.ஆர்.சி.காலனி பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து 2 மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென வசந்தகுமாரை வழிமறித்து பயங்கரஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

இதில் படுகாயம் அடைந்த வசந்தகுமார் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய வசந்தகுமாரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே வசந்தகுமார் பரிதாபமாக இறந்தார்.

ஒருவர் சிக்கினார்

இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரடிக்கல் ஜல்லிக்கட்டு தொடர்பாக கூத்தியார்குண்டை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் வசந்தகுமார் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றார். கடந்த சில மாதங்களாக கோவையில் தனியார் நிறுவனத்தில் அவர் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதுரைக்கு வந்தபோதுதான் அவரை 2 பேர் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே வசந்தகுமாரை கொலை செய்த 2 பேரில் ஒருவர் சிக்கினார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்