தாளவாடி அருகேதோட்டத்தில் புலி நடமாட்டம்
தாளவாடி அருகே தோட்டத்தில் புலி நடமாட்டம் காணப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.
தாளவாடி
தாளவாடி அருகே தோட்டத்தில் புலி நடமாட்டம் காணப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.
10 வனச்சரகம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.
இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி வருகிறது. மேலும் புலி, சிறுத்தை போன்றவை கிராமங்களுக்குள் புகுந்து மாடு, ஆடு மற்றும் நாய்களை அடித்து கொல்வதும் நிகழ்ந்து வருகிறது.
தோட்டத்தில் உட்கார்ந்திருந்த புலி
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட பசப்பன்தொட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் என்பவரின் தோட்டத்தில் புலி ஒன்று உட்கார்ந்திருந்ததை கண்டதும் அவர் பீதியில் உறைந்து போனார். மேலும் இந்த காட்சியை அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த புலி அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
பொதுமக்கள் அச்சம்
இதனிடையே ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட திகனாரையை அடுத்த ஜோரைகாடு கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தின் அருகே ஓடும் ஒடையில் நேற்று காட்டுப்பன்றியின் உடல் பாதி தின்னப்பட்ட நிலையில் கிடந்ததை பொதுமக்கள் கண்டனர். மேலும் அந்த பகுதியில் புலியின் கால் தடம் பதிவாகி இருந்ததையும் பார்த்தனர். இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த கால் தடயத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அது புலியின் கால் தடம் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். மேலும் காட்டுப்பன்றியை புலி வேட்டையாடி அதன் உடலில் பாதியை தின்றுவிட்டு மீதம் உள்ள உடலை அந்த பகுதியில் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என வனத்துறையினருக்கு தெரியவந்தது. விவசாய தோட்டம் உள்ள பகுதியில் புலியின் நடமாட்டம் காணப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'பொதுமக்கள் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்,' என அறிவுறுத்தி உள்ளனர்.