தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்; வாழை சேதம்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் வாழைகள் சேதம் ஆனது.

Update: 2022-09-01 21:06 GMT

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் வாழைகள் சேதம் ஆனது.

10 வனச்சரகங்கள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுவதும், அங்கு பயிரிட்டு உள்ள வாழை, தென்னை, கரும்பு போன்ற பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவம் தாளவாடி அருகே நடைபெற்று உள்ளது.

3 யானைகள்

தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 47). விவசாயி. இவர் தன்னுடைய 3 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11 மணிஅளவில் வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் வெளியேறி சண்முகசுந்தரத்தின் தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் அந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. அப்போது யானைகள் பிளிறின.

யானைகளின் பிளிறல் சத்தத்தை கேட்டதும், தோட்டத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த சண்முகசுந்தரம் திடுக்கிட்டு எழுந்தார். அப்போது தோட்டத்துக்குள் 3 யானைகள் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார்.

வாழைகள் சேதம்

இதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு நேற்று அதிகாலை 2 மணி அளவில் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.

தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் ½ ஏக்கர் பரப்பளவிலான வாழைகள் சேதமடைந்தன. 

Tags:    

மேலும் செய்திகள்