தாளவாடி அருகே மயக்க ஊசி செலுத்தப்பட்ட கருப்பன் யானை தோட்டத்தில் புகுந்தது
தாளவாடி அருகே மயக்க ஊசி செலுத்தப்பட்ட கருப்பன் யானை தோட்டத்தில் புகுந்தது. எனவே வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தாளவாடி
தாளவாடி அருகே மயக்க ஊசி செலுத்தப்பட்ட கருப்பன் யானை தோட்டத்தில் புகுந்தது. எனவே வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கருப்பன் யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன இந்த வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. உணவு, தண்ணீரை தேடி யானைகள் அவ்வப்போது விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்துவிடுகின்றன.
குறிப்பாக கருப்பன் என்ற ஒற்றை யானை அடிக்கடி வெளியேறி பயிர்களை நாசம் ெசய்து வந்தது. மேலும் தோட்டத்தில் காவலுக்கு இருந்த 2 விவசாயிகளையும் மிதித்து கொன்றது. இதனால் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
மயக்க ஊசி
இதையடுத்து வனத்துறையினர் கருப்பன் யானையை பிடிக்க பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம், அரிசி ராஜா, கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகளை வரவழைத்தார்கள். மேலும் மருத்துவர்களுடன் சேர்ந்து வனத்துறை குழுவும் உருவாக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த 14-ந் தேதி அதிகாலை இரியபுரத்தில் உள்ள தேவராஜ் என்பவருடைய தோட்டத்தில் கருப்பன் யானை புகுந்தது. உடனே கும்கி யானைகள் சுற்றி வளைக்க, மருத்துவ குழுவினர் கருப்பன் யானை மீது துப்பாக்கி மூலம் 2 மயக்க ஊசிகளை செலுத்தினார்கள். ஆனால் அரைகுறை மயக்கத்திலேயே கருப்பன் யானை தப்பி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
கண்காணிப்பு
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட கல்மாண்டிபுரம் கனகராஜ் என்பவர் தோட்டத்தில் கருப்பன் யானை புகுந்தது. உடனே தயார் நிலையில் இருந்த ஆபரேஷன் குழுவினர் அங்கு சென்று யானையை கண்காணித்து வருகின்றனர். இரவில் மயக்க ஊசி செலுத்தி கருப்பனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.