தாளவாடி அருகேஅடித்துக்கொன்ற மாட்டை தின்பதற்காக பதுங்கி வந்த புலி;கண்காணிப்பு கேமராவில் பதிவானது

தாளவாடி அருகே அடித்துக்கொன்ற மாட்டை தின்பதற்காக பதுங்கி பதுங்கி வந்த புலி, அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

Update: 2023-02-18 21:24 GMT

தாளவாடி

தாளவாடி அருகே அடித்துக்கொன்ற மாட்டை தின்பதற்காக பதுங்கி பதுங்கி வந்த புலி, அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

10 வனச்சரகங்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஜீர்கள்ளி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது கிராமம் மற்றும் விவசாய தோட்டத்துக்குள் புகுந்து அங்குள்ள ஆடு, மாடு, நாய்களை கொன்றுவிடுவது தொடர்கதையாகி வருகிறது.

அடித்துக்கொன்றது

கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி ஒன்று கடந்த ஒரு ஆண்டாக தாளவாடியை அடுத்த சேஷன்நகர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து 20-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளையும், 10-க்கும் மேற்பட்ட நாய்களையும் கொன்று உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாளவாடியை அடுத்த சேஷன்நகர் பகுதியை சேர்ந்த சிவராஜ் (வயது 37) என்பவரின் ஒரு பசுமாட்டை புலி அடித்து கொன்றது. மற்றொரு பசு மாடு படுகாயம் அடைந்தது. கால்நடைகள் மற்றும் நாய்களை கொன்று தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கண்காணிப்பு கேமரா

மேலும் அடித்துக்கொன்ற பசு மாட்டை தின்பதற்காக எப்படியாவது புலி வரும் என வனத்துறையினர் கருதினர். இதைத்தொடர்ந்து இறந்த மாட்டின் அருகில் வனத்துறையினர் 4 கண்காணிப்பு கேமராக்களை நேற்று முன்தினம் மாலையில் பொருத்தினர்.

இதையடுத்து நேற்று காலை வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அடித்துக்கொன்ற பசு மாட்டை தின்பதற்காக புலி பதுங்கி பதுங்கி வந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் சேஷன் நகர் பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

கூண்டு வைத்து பிடிக்க...

அதுமட்டுமின்றி சேஷன் நகர் பகுதியானது தமிழகம், கர்நாடக மாநில எல்லையில் உள்ளது. மேலும் புலியானது கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறி, தமிழக பகுதிக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை கொன்று உள்ளது. எனவே இதுகுறித்து தமிழக வனத்துறையினர், கர்நாடக மாநில வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து இரு மாநில வனத்துறையினரும் ஆலோசனை நடத்த உள்ளனர். எனவே அட்டகாசம் செய்யும் புலியை கூண்டு வைத்து பிடிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தாளவாடி வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்