ஸ்ரீவைகுண்டம் அருகே3 தோட்டத்தில் தீ விபத்து; 2 ஆயிரம் வாழைகள் எரிந்து நாசம்

ஸ்ரீவைகுண்டம் அருகே 3 தோட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 ஆயிரம் வாழைகள் எரிந்து நாசமாகின.

Update: 2023-08-22 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே நேற்று 3 தோட்டங்களில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 ஆயிரம் வாழைகள் எரிந்து நாசமாகின.

தோட்டத்தில் தீவிபத்து

ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கருங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சேகர். இவருக்கு நெல்லை-திருச்செந்தூர் மெயின்ரோடு அருகே வாழைத்தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் வாழை மரங்களில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் அடுத்தடுத்த மரங்களில் தீப்பற்றி எரிந்து, பக்கத்திலுள்ள பெருமாள் மனைவி முத்துமாரிக்கு சொந்தமான தோட்டத்திற்கும் தீ பரவியது. அங்கிருந்த வாழை மரங்களிலும் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் செய்துங்கநல்லூர் போலீசாரும், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு வீரர்களும் அப்பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இதற்கிடையில் அந்த 2 தோட்டங்களிலும் ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் எரிந்து நாசமானது.

இசவன்குளம்

இதற்கிடையில் அருகிலுள்ள இசவன்குளம் பகுதியை சேர்ந்த சேதுராமலிங்கத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர்

வாழை தோட்டத்திலும் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் இசக்கி தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், அந்த தோட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீவிபத்து குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்