ஸ்ரீமுஷ்ணம் அருகேவீட்டு கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

ஸ்ரீமுஷ்ணம் அருகே வீட்டு கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2023-01-07 18:45 GMT

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள நகரப்பாடி கிராமம் சங்காங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி அகிலா (வயது 33). 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த ஜெயக்குமார் சமீபத்தில் தான் சொந்த ஊருக்கு திரும்பியிருந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் அகிலா தனது கணவர், குழந்தைகளுடன், மீன்சுருட்டியில் உள்ள தன் தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்கள் வீடுதிரும்பினார்கள்.

அப்போது, அவர்களது வீட்டு கதவின் மேற்பகுதி உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் , வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வைத்திருந்த ரூ. 50 ஆயிரம், 5½ பவுன் நகை, ¼ கிலோ வெள்ளி கொலுசு ஆகியன கொள்ளை போயிருந்தது.

போலீஸ் வலைவீச்சு

இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் தலைமையில் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

அப்போது, முன்பக்க கதவு மேற்பகுதியில் உடைத்து உள்ளே சென்ற மர்ம மனிதர்கள், நகை பணத்தை கொள்ளையடித்துவிட்டு, பின்பக்க கதவை திறந்து தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.

மேலும், கடலூர் தடயவியல் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் நேரில் வந்து தடயங்களை சேகரித்தார். இதுகுறித்து அகிலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்