சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 வாலிபர்கள் பலி

சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர்கள் 2 பேர் பலியாகினர்.

Update: 2022-12-11 21:02 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர்கள் 2 பேர் பலியாகினர்.

தொழிலாளி

சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் புதுக்காலனியை சேர்ந்தவர் அரவிந்தசாமி (வயது 29). இவர் சத்தியமங்கலத்தை அடுத்த ஆலத்துகோம்பையில் உள்ள கிரானைட் கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஹேமலதா (26), இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் பெண் குழந்தை ஒன்று பிறந்து உள்ளது.

இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (25). வாழைக்காய் வெட்டும் தொழிலாளி. இவர் சத்தியமங்கலத்தில் உள்ள சதுமுகை பகுதியில் தங்கி இருந்து வாழைக்காய் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

நேருக்கு நேர் மோதல்

இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் அரவிந்தசாமி சென்று கொண்டிருந்தார்.

கொடிவேரி- சத்தியமங்கலம் சாலையில் சிவியார்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அரவிந்தசாமியின் மோட்டார்சைக்கிளும், முத்துராமலிங்கத்தின் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

சாவு

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். அரவிந்தசாமிக்கு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அரவிந்தசாமி உயிரிழந்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்