சத்தியமங்கலம் அருகே மாட்டை தந்தத்தால் குத்திக்கொன்ற காட்டுயானை வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

சத்தியமங்கலம் அருகே மாட்டை தந்தத்தால் காட்டுயானை குத்திக்கொன்றது. இதனால் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்டு யானை குத்திக்கொன்றது

Update: 2023-06-16 21:36 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே மாட்டை தந்தத்தால் காட்டுயானை குத்திக்கொன்றது. இதனால் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டு யானை குத்திக்கொன்றது

சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியையொட்டி மலை அடிவாரத்தில் உள்ளது ஆலம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகராஜ் (வயது 43) என்பவர் 3 பசுமாடுகளை வளர்த்து வந்தார். வீட்டின் அருகிலேயே மாடுகளை கட்டி வைத்திருப்பார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை நாகராஜ் மாடுகளில் இருந்து பால் கறந்தார். பின்னர் பால் கேனுடன் வீட்டுக்கு அவர் செல்ல முயன்றபோது திடீரென அங்கு ஒரு காட்டு யானை வேகமாக ஓடிவந்தது. கண்இமைக்கும் நேரத்தில் 3 மாடுகளில் ஒரு மாட்டின் வயிற்றில் தந்தத்தால் குத்தி இழுத்து சென்றது. சற்று தூரம் மாறி மாறி தந்தத்தால் குத்திக்கொண்டே இருந்தது. இதனால் துடிதுடித்து அந்த இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர் யானை காட்டுக்குள் ஓடிவிட்டது.

முற்றுகை போராட்டம்

கண்முன்னே நடந்த இந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜ் அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு இதுபற்றி ெசல்போனில் தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் ஒன்று திரண்ட விவசாயிகள் காட்டு யானையால் கொல்லப்பட்ட பசுமாட்டின் உடலை ஒரு வேனில் ஏற்றி சத்தியமங்கலத்தில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு சென்றனர்.

பின்னர் மாட்டின் உடலை அலுவலகத்தின் நுழைவு வாயிலில் போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிச்சாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், பவானிசாகர் வனச்சரகர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் வனத்துறை அலுவலகத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள், யானை குத்திக்கொன்ற பசுமாட்டுக்கு இழப்பீடாக நாகராஜூக்கு ரூ.60 ஆயிரம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு வனத்துறை அதிகாரிகள், 'இன்னும் 10 நாட்களில் இழப்பீடாக ரூ.30 ஆயிரம் பெற்றுத்தருகிறோம்' என்றனர். அதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டனர்.

பரிசோதனை

அதன்பின்னர் மாட்டின் உடல் மீண்டும் நாகராஜூக்கு சொந்தமான இடத்துக்கு வேனில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கால்நடை டாக்டர்கள் மாட்டின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிறகு பசுமாட்டின் உடல் புதைக்கப்பட்டது.

மாட்டை காட்டு யானை தந்தத்தால் குத்திக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்