சத்தியமங்கலம் வாரச்சந்தை அருகேபோக்குவரத்து போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த நடவடிக்கைநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தல்

சத்தியமங்கலம் வாரச்சந்தை அருகே போக்குவரத்து போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

Update: 2023-08-31 21:50 GMT

சத்தியமங்கலம் வாரச்சந்தை அருேக போக்குவரத்து போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.

நகராட்சி கூட்டம்

சத்தியமங்கலம் நகராட்சி கூட்டம், அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ஆர்.ஜானகிராமசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் செல்வம், துணைத்தலைவர் ஆர்.நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

சீனிவாசன் (தி.மு.க.):- எஸ்.ஆர்.டி. சந்திப்பு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்தது குறித்து பல முறை புகார் கொடுத்தும் சரி செய்து கொடுக்கப்படவில்லை. எனது வார்டில் பல இடங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை.

தலைவர் ஆர்.ஜானகிராமசாமி:- விரைவாக செய்து தரப்படும்.

அரவிந்த் சாகர் (பா.ஜ.க.):- சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட தள்ளு வண்டிகள் எத்தனை. எப்போது அதை வழங்க போகிறீர்கள்.

தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி:- மொத்தம் 16 தள்ளு வண்டிகள் வந்துள்ளன. தகுதி அடிப்படையில் வியாபாரிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.

கடிதம் எழுதப்படும்

தனபாக்கியம் (அ.தி.மு.க.):- எனது வார்டில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் சரிவர வருவதில்லை. பழுதடைந்து கிடக்கிறது. எனவே அதை சரி செய்து தர வேண்டும். செயல்படாத கழிப்பிடத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.

தலைவர் ஆர்.ஜானகிராமசாமி:- நேரில் ஆய்வு செய்து சரி செய்து தரப்படும்.

லட்சுமணன் (அ.தி.மு.க.):- எனது வார்டில் உள்ள படித்துறையில் கொட்டப்பட்ட மண் அகற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி:- அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உமா (பா.ஜ.க.):- எனது வார்டில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பழுது ஏற்பட்டு உள்ளது. அதை சரி செய்து கொடுக்க வேண்டும். வாரச்சந்தை அருகே எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ளது. எனவே போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து போலீசார் ஒருவரை பாதுகாப்பு பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர் ஆர்.ஜானகிராமசாமி:- வாரச்சந்தை அருகே போக்குவரத்து போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும் என போக்குவரத்து போலீசாருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. ஆனால் யாரும் சரிவர வருவதில்லை. மீண்டும் இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு கடிதம் எழுதப்படும்.

44 தீர்மானங்கள்

எஸ்.ஆர்.சாவித்திரி (தி.மு.க.) எனது வார்டில் பல பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு விண்ணப்பம் செய்தும் பட்டா கிடைக்கவில்லை.

தலைவர் ஆர்.ஜானகிராமசாமி:- சத்தியமங்கலத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மனுக்கள் மீண்டும் ஒருமுறை கொடுங்கள். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்கண்டவாறு விவாதங்கள் நடைபெற்றது.

நகராட்சி கூட்டத்தில் மொத்தம் 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்