சாத்தான்குளம் அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

சாத்தான்குளம் அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-07 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

டிரைவர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பள்ளங்கிணறு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பட்டுராஜா. இவருடைய மகன் ரேவந்த் குமார் (வயது 26). லோடு ஆட்டோ டிரைவரான இவர் சென்னையில் பழைய இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவில் சாத்தான்குளம் அருகே செட்டிகுளத்தை அடுத்த நொச்சிகுளம் விலக்கு அருகில் உள்ள கல்லறை தோட்டம் பகுதியில் ரேவந்த் குமார் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

போலீசார் விசாரணை

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்த ரேவந்த் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தசரா குழு நடத்துவதில் பிரச்சினை

விசாரணையில், கொலையான ரேவந்த்குமாரின் சித்தப்பாவான பள்ளங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த செந்தில்வேல், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் தசரா குழு நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த சாமுவேல் மகன் சித்திரைஜெகன் என்ற ஜெகன் (36) உள்ளிட்ட 2 பேர் சம்பந்தப்பட்டது தெரிய வந்தது.

இந்த நிலையில் பள்ளங்கிணறு கிராமத்தில் 2 தசரா குழுக்கள் செயல்பட்டு வந்தது. இதில் ஒரு தசரா குழுவில் ரேவந்த்குமார் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இதையடுத்து ரேவந்த்குமார் தனது சித்தப்பா செந்தில்வேல் கொலைக்கு பழிக்குப்பழியாக தன்னை தீர்த்து கட்டக்கூடும் என்று கருதிய சித்திரை ஜெகன், அவரது தம்பி சுடலை (34), உறவினரான ஆறுமுகம் மகன் கூலித்தொழிலாளியான முத்துசாமி (40) ஆகிய 3 பேர் ரேவந்த்குமாரை கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

தொழிலாளி கைது

இதையடுத்து தலைமறைவான முத்துசாமியை (40) போலீசார் பிடித்து கைது செய்தனர். இதற்கிடையே, ரேவந்த்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சித்திரை ஜெகன் நேற்று நாங்குநேரி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் தலைமறைவாக உள்ள சுடலையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்