சாத்தான்குளம் அருகே பஸ் படிக்கட்டில் பயணித்த கல்லூரி மாணவர் கால்பெருவிரல் துண்டானது
சாத்தான்குளம் அருகே பஸ் படிக்கட்டில் பயணித்த கல்லூரி மாணவர் கால்பெருவிரல் துண்டானது. மேலும் ஒரு விரலும் பாதிக்கப்பட்டது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவரின் இடது கால் பெருவிரல் வேகதடையில் உரசியதில் துண்டானது. மற்றொரு விரலும் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்
சாத்தான்குளம் அருகே பிரண்டார்குளம் பள்ளித் தெருவைச் சேர்ந்த ஏசாபெஸ்கிதாசன் மகன் டேவிட் மனக்காஸ் (வயது 17). இவர் நாசரேத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று காலையில் கல்லூரி செல்ல பேய்க்குளத்தில் இருந்து சாத்தான்குளம் சென்ற தனியார் பஸ்சில் பயணித்தார்.
படிக்கட்டில் பயணம்
அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் படிக்கட்டில் நின்று பயணித்துள்ளார். செட்டிக்குளம் ஸ்ரீதுர்க்கை அம்மன் கோவில் அருகில் உள்ள வேகத்தடையில் பஸ் கடந்தபோது டேவிட் மனக்காஸ் இடது கால் சாலையில் உரசியுள்ளது. அதில் அவரது பெருவிரல் உடைந்தும், அடுத்த விரல் ஒடிந்தததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக பஸ்சை நிறுத்தி, ரத்தகாயங்களுடன் துடித்த அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பெருவிரல் துண்டிப்பு
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவருக்கு பெருவிரல் துண்டிக்கப்பட்ட நிலையில், அடுத்த விரலில் கம்பி வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்சன் வழக்குபதிவு செய்து தனியார் பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
.