கம்பம் அருகே தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு
கம்பம் அருகே தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தை சேர்ந்தவர் சையதுஅப்தாஹிர். நேற்று அதே பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் உழவு பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதைக்கண்ட சையது அப்தாஹிர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் கம்பம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தாா்.
தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்டது சுமார் 4 அடி நீள மலைப்பாம்பு ஆகும். அந்த பாம்பு கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.