பெரியகுளம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவர்கள் உள்பட 3 பேர் பலி

பெரியகுளம் அருகே திருவிழாவுக்கு வந்தபோது கண்மாயில் மூழ்கி சிறுவர்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.

Update: 2022-06-09 16:04 GMT

கோவில் திருவிழா

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தொட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த ரவி மகன் பன்னீர்செல்வம் (வயது 25). திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மிளகாய்பட்டியை சேர்ந்த லட்சுமணன் மகன்கள் மணிமாறன் (12), ருத்ரன் (7). மூலச்சத்திரம் அருகே உள்ள வேலன் சேவுகாரன்பட்டியை சேர்ந்த பாபு மகன் சபரிவாசன் (11).

இவர்கள் முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி தங்களது உறவினரான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியை சேர்ந்த தர்மராஜன் வீட்டிற்கு வந்தனர். திருவிழா நேற்று முடிந்தது. இந்நிலையில் பன்னீர்செல்வம், மணிமாறன்,ருத்ரன், சபரிவாசன் ஆகியோர் அருகே உள்ள பாப்பியன்பட்டி கண்மாயில் குளிக்க சென்றனர். கண்மாயில் 3 பேரும் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர்.

நீரில் மூழ்கினர்

பன்னீர்செல்வம் கண்மாய் கரையில் அமர்ந்து சிறுவர்கள் குளிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கண்மாயில் குளித்து கொண்டிருந்த 3 சிறுவர்களும் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். இதையடுத்து நீரில் தத்தளித்த அவர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அலறியபடி தண்ணீரில் மூழ்கினர். சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் பதறி அடித்துக்கொண்டு கண்மாயில் குதித்து சிறுவர்களை காப்பாற்ற முயன்றார்.

ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதில் அவரும் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அபயகுரல் எழுப்பினார். இந்த சத்தம் கேட்டு அருகில் உள்ள தோட்டங்களில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கண்மாயில் குதித்து நீரில் மூழ்கிய 4 பேரையும் மீட்டனர்.

3 பேர் சாவு

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்கரை போலீசார் 4 பேரையும் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் பன்னீர்செல்வம், மணிமாறன், சபரிவாசன் ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ருத்ரனுக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளி்க்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதையடுத்து அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரின் கண்களை கலங்க வைத்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர். திருவிழாவுக்கு வந்தபோது கண்மாயில் மூழ்கி சிறுவர்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Tags:    

மேலும் செய்திகள்