பெரியகுளம் அருகே தடுப்புச்சுவரில் பஸ் மோதி 6 பேர் படுகாயம்
பெரியகுளம் அருகே தடுப்புச்சுவரில் பஸ் மோதி 6 போ் படுகாயம் அடைந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் சிங்காரக்கோட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 42), தனியார் பஸ் டிரைவர். இவர் திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கி பஸ்சை ஓட்டி சென்றார். பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியை கடந்து சென்ற சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த பெரியகுளத்தை சேர்ந்த இக்பால் (55), போடியை சேர்ந்த பாலாஜி (40), கொல்லிமலையை சேர்ந்த பார்வதி (52), கேரளாவை சேர்ந்த சதீஷ் (36), இவரது மனைவி ஷோபனா (30), டிரைவர் சுப்பிரமணி ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.