ஓட்டப்பிடராம் அருகேவேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்தது:10 பேர் படுகாயம்
ஓட்டப்பிடராம் அருகே வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்ததில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓட்டப்பிடாரம்:
சாத்தான்குளத்தை சேர்ந்தவர் கண்ணன். அவரது ஒருவயது மகன் முத்து நவநீதகிருஷ்ணனுக்கு முடிகாணிக்கை செலுத்துவதற்காக நேற்று காலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு உறவினர்கள் 15 பேருடன் வேனில் புறப்பட்டு சென்றார். தூத்துக்குடி வழியாக சென்று கொண்டிருந்த வேனை சாத்தான்குளம் அருகே உள்ள வல்லாங்குளம் சேர்ந்த மூக்கன் மகன் தங்கராஜ் ஓட்டி சென்றார். வேன் ஓட்டப்பிடாரம் அருகே புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகில் உள்ள மேம்பாலம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக டயர் வெடித்து வேன் நிலைத்தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த கண்ணன், அவரது மனைவி சுகன்யா (24), மகன் முத்துநவநீதகிருஷ்ணன் (1), முத்துமாரியப்பன், ராமன்லட்சுமணன், ராணி, பாண்டியம்மாள், சுப்புலட்சுமி, முத்துமாரி, மீனா உட்பட 10 பேர் படுகாயங்களுடன் இடிபாடுக்குள் சிக்கி கதறி துடித்தனர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று, வேனின் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.