ஓட்டப்பிடாரம் அருகேபள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-02 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவி திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவி

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதும்வென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார் (வயது 43). இவர் சொந்தமாக கோழி பண்ணை வைத்துள்ளார். இவரது மனைவி வீரலெட்சுமி. இவர்களுக்கு சுபபிரியா (15) என்ற மகளும், சூர்யா (12) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் பசுவந்தனை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சுபபிரியா 9-ம்வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் சூர்யா 8-ம்வகுப்பு படித்து வருகிறார்.

தனியாக இருந்தார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இருவரும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் இருந்த பெற்றோர்கள் சிறிது நேரத்தில் கோழிப்பண்ணைக்கு சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து சூர்யாவும் நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார்.

வீட்டில் சுபபிரியா மட்டும் தனியாக இருந்துள்ளார். அதன் பிறகு வீட்டுக்கு வந்த பெற்றோர் வீட்டின் கதவு உள்புறமாக பூட்டி இருப்பதை கண்டு பதற்றம் அடைந்தனர்.

தூக்கில் பிணம்

நீண்டநேரம் சத்தம் போட்டும் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். வீட்டிற்குள் சுபபிரியா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை உடலை பார்த்து பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த எப்போதும்வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் மற்றும் போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு, பிரத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவி திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்