ஓட்டப்பிடாரம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஓட்டப்பிடாரம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-06-12 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே வீட்டின் மீது மின்கம்பம் முறிந்து விழுந்த சம்பவத்தை கண்டித்து நேற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேதமடைந்த மின்கம்பங்கள்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் 10 மின்கம்பங்கள் சேதமடைந்து இருந்துள்ளன. அதிலும் நான்கு மின்கம்பங்களின் அடிப்பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்து தொங்கி கொண்டிருந்துள்ளனர். இந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்றி விட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கடந்த ஓராண்டுக்கு மேலாக மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். ஆனால் மின்வாரிய துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வீட்டின் மீது விழுந்தது

இந்த நிலையில் நேற்று மாலையில் மீனாட்சிபுரம் பகுதியில் பலத்த காற்று வீசியது. இந்த காற்றுக்கு சேதமடைந்த மின்கம்பங்களில் ஒன்று முறிந்து அந்த கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டின் மேல் விழுந்துள்ளது. இதில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மின்சாரத்தை நிறுத்தியதால் விபரீதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

சாலைமறியல்

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்தும். இதில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், சேதமடைந்த மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் பசுவந்தனை -எப்போதுவென்றான் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

விரைவில் சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்