ஊஞ்சலூர் அருகேவிஷம் குடித்து பெண் என்ஜினீயர் தற்கொலை
ஊஞ்சலூர் அருகே திருமண வரன் அமையாததால் விஷம் குடித்து பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே திருமண வரன் அமையாததால் விஷம் குடித்து பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
பெண் என்ஜினீயர்
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரை அடுத்த கொளத்துப்பாளையம் அருகே உள்ள ஆராம்பாளையம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 57). இவருடைய மகள் மாலினி ஸ்ரீ (26). இவர் பி.டெக் ஐ.டி முடித்துவிட்டு், பெங்களூவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஒரு மாத காலமாக ஆராம்பாளையம் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மாலினி ஸ்ரீக்கு பெற்றோர் திருமணம் செய்ய வரன் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சரியான வரன்கள் அமையவில்லை.
விஷம் குடித்தார்
இதனால் மாலினி ஸ்ரீ மனமுடைந்த நிலையில் காணப்பட்டு் வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 21-ந்தேதி வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) எடுத்து தின்று விட்டார். மேலும் இதனை வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தார்.
25-ந் தேதி மாலினிஸ்ரீக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. அதன்பின்னர் தான் அவர் விஷம் குடித்ததாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் மாலினி ஸ்ரீயை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
சாவு
ஆனால் நேற்று முன்தினம் மாலினி ஸ்ரீயின் உடல்நிலை மிகவும் மோசமானது. அதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் இறந்தார்.
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண வரன் அமையாததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.