நாசரேத் அருகேதண்டவாளத்தில் நடந்த சிறுவன் டிராலி மோதி பலி

நாசரேத் அருகே தண்டவாளத்தில் நடந்த சிறுவன் டிராலி மோதி பலியானார்.

Update: 2023-09-06 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் அருகே ெரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற சிறுவன், டிராலி மோதி பலியானான்.

சிறுவன்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி ஊரைச் சேர்ந்தவர் ராசையா மகன் சரவணன் மாரி (வயது 16). 10-ம் வகுப்பு வரை படித்த இவன், கடந்த ஒரு வாரமாக அங்குள்ள ஒரு கடையில் வேலைக்கு சென்று வந்தான்.

இந்த நிலையில் சரவணன் மாரி நேற்று முன்தினம் மாலை மூக்குப்பீறி - நாசரேத் இடையே ெரயில் தண்டவாளத்தில் ஹெட்போனில் பாட்டு கேட்டபடி நடந்து சென்றதாக கூறப்படுகிறது.

டிராலி மோதியது

அப்போது அந்த வழியாக திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி டிராலி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. டிராலியை ஓட்டியவர், தண்டவாளத்தில் சிறுவன் நடந்து செல்வதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். ஆனால் இந்த சத்தம் சரவணன் மாரிக்கு கேட்கவில்லை.

பின்னர் டிராலியை பிரேக் போட்டு நிறுத்த முயற்சித்தும் முடியவில்லை. இதனால் சரவணன் மாரி மீது டிராலி மோதியது.

பரிதாப சாவு

இதில் படுகாயம் அடைந்த சரவணன் மாரி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

தகவல் அறிந்ததும் நெல்லை ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சரவணன் மாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ெரயில்வே போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹெட்போனில் பாட்டு கேட்டபடியே தண்டவாளத்தில் நடந்து சென்றதால் சிறுவன் பலியான இந்த விபரீத சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்