குள்ளஞ்சாவடி அருகே பத்திர எழுத்தர் வீட்டில் ரூ.4½ லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபா்களுக்கு போலீஸ் வலைவீச்சு

குள்ளஞ்சாவடி அருகே பத்திர எழுத்தர் வீட்டில் ரூ.4½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபா்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-11-27 19:45 GMT

குள்ளஞ்சாவடி, 

குள்ளஞ்சாவடி அருகே உள்ள கருமாச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் குள்ளஞ்சாவடியில் பத்திர எழுத்தராக வேலைபார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி சத்யபிாியாவுடன் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படிக்கும் மகளை பார்ப்பதற்காக சென்றார். இந்த நிலையில் நேற்று காலையில் இவருடைய வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி கண்ணனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து கண்ணன் குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் வீட்டின் அறையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 15 பவுன் நகைகள், ரூ. 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.

வலைவீச்சு

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். பின்னர் கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டை மோப்பம்பிடித்தபடி, கடலூர் மெயின் ரோடு வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்