கோத்தகிரி அருகே பொதுமக்களை கரடி விரட்டியதால் பரபரப்பு
கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த கரடி பொதுமக்கள் வி
கோத்தகிரி
கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த கரடி பொதுமக்கள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரடிகள் படையெடுப்பு
கோத்தகிரி கட்டபெட்டு வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியான குண்டூர் காலனி மற்றும் வள்ளுவர் காலனி கிராமங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிரமாங்களுக்கு செல்லும் சாலையில் காத்துக்குளி முதல் ஆடத்தொரை வரையுள்ள சாலையோரங்களில் தேயிலைத் தோட்டங்களை ஒட்டி ஏராளமான புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன.
இதில் வளர்ந்துள்ள உண்ணிக்காய் செடிகளில் உள்ள பழங்கள் கரடிகளுக்குப் பிடித்தமான உணவு என்பதால் அவற்றை உண்பதற்காக கரடிகள் இந்தப் பகுதிகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளன.
இந்தநிலையில் குண்டூர் காலனியைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்குச் செல்வதற்காக நடந்து செல்லும் போது சாலையில் கரடி ஒன்று நின்று கொண்டிருப்பதை கண்டனர்.
மேலும் அந்த கரடி பொதுமக்களை விரட்டியபடி ஓடி வந்தது. இதனால் அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அவர்கள் உடனடியாக கட்டபெட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
புதர் செடிகள் அகற்றம்
அதன்பேரில் வனக்காப்பாளர் நாகேஷ், வனக்காவலர் ராஜேஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடியை அருகிலிருந்த வனப்பகுதிக்கு பாதுகாப்பாக விரட்டினர். மேலும் சாலையோரங்களில் வளர்ந்திருந்த செடிகளை வெட்டி அகற்றுமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தினர். தொடர்ந்து அந்த சாலையோரம் வளர்ந்திருந்த புதர்ச் செடிகள் வெட்டி அகற்றப்பட்டன.
இதுகுறித்து கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார் தெரிவிக்கையில், தற்போது கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் ஏராளமான புதர் செடிகள் வளர்ந்துள்ளன. எனவே புதர் மறைவில் கரடிகள் முகாமிட வாய்ப்புள்ளது. அதனால் செடிகள் வெட்டி அகற்றப்பட்டன.
மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.