கோத்தகிரி அருகே வீட்டின் வளாகத்திற்குள் உலா வந்த கரடி-கூண்டு வைத்துப்பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
கோத்தகிரி அருகே வீட்டின் வளாகத்திற்குள் உலா வந்த கரடியை கூண்டு வைத்துப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே வீட்டின் வளாகத்திற்குள் உலா வந்த கரடியை கூண்டு வைத்துப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
உலா வந்த கரடி
கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் உள்ள பெரியார் நகர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியாக உள்ளதால் இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலையில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.
இநத்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு கரடி ஒன்று அங்குள்ள வீட்டின் பாதுகாப்பு சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றது. கரடியைக் கண்டு வீட்டு வளர்ப்பு நாய்க் குரைத்த சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் விளக்கை ஒளிரச் செய்து வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் பார்த்தபோது கரடி ஒன்று வீட்டின் வாசலில் உலா வந்தவாறு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பொதுமக்கள் அச்சம்
சற்று நேரம் அங்கேயே இருந்த கரடி பின்னர் அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயரதிகாரிகள் பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கரடிகளை கூண்டு வைத்துப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.