கவுந்தப்பாடி அருகே 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் மயங்கி விழுந்து சாவு

கவுந்தப்பாடி அருகே 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் மயங்கி விழுந்து இறந்தாா்.

Update: 2023-10-11 23:55 GMT

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

காதல் திருமணம்

கவுந்தப்பாடி அருகே உள்ள பூமாண்டக்கவுண்டனூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 63). விவசாயி. அவருடைய மகள் பூரணி. கவுந்தப்பாடி அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் மகன் மதன்குமார் (29). இவரும், பூரணியும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2 பேரும் பெங்களூருவில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தனர்.

மயங்கி விழுந்த பெண்

இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த பூரணிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து சின்னியம்பாளையத்தில் உள்ள கணவர் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு மதன்குமார் ஓடி வந்து பார்த்தார். அப்போது பூரணி மயங்கி கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

சாவு

அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு பூரணி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதனால் உயிரிழந்தார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்ப்பால் கொடுத்தபோது பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்