காரிமங்கலம் அருகே, கூடுதல் பஸ் இயக்கக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்

காரிமங்கலம் அருகே கூடுதல் பஸ் இயக்கக்கோரி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-18 17:14 GMT

காரிமங்கலம்:

மாணவ-மாணவிகள் பாதிப்பு

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பூமாண்ட அள்ளி ஊராட்சியில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய கட்டிடத்தை கடந்த மாதத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இந்த மையத்தில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் முதுகலை பட்ட மேற்படிப்பு படித்து வருகின்றனர். தர்மபுரியில் இருந்து முதுநிலை விரிவாக்க மையத்திற்கு சென்று வர போதிய பஸ் வசதி ஏற்படுத்தப்படாததால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

சாலைமறியல்

இதையடுத்து கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தி முதுநிலை விரிவாக்க மையத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே பைசுஅள்ளி மோதூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்ய தொடங்கினர். தகவல் அறிந்த காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் சுகுமார் மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அடுத்த வாரம் முதல் விரிவாக்க மையத்திற்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதனால் சாலை மறியல் போராட்டம் செய்ய வந்த மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து மீண்டும் கல்லூரிக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்